இப்போது புத்தரின் படங்களை பல தளங்களில் பார்க்கிறேன். அவையெல்லாம் புத்தர் குறித்து பேசுவன அல்ல. வாருங்கள் பெளத்தம் ஏற்போம் என்ற அழைப்பின் வெளிப்பாடுகள். அல்லது புத்தர் என்ற குறீயிட்டின் படி தாங்கள் யாரென்பதை சொல்லும் சாதி விசயங்கள்.
அம்பேத்கர் பெளத்தம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்பேத்கர் பெளத்தம் ஏற்றார். அல்லது ஏற்க வைக்கப்பட்டார். அதே அம்பேத்கர் முதலில் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தான் சொல்கிறார். இஸ்லாம் கிறிஸ்தவம் என எங்கும் செல்லுங்கள் என்ற அழைக்கிறார். பேசுகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொஞ்சம் நிலை மாறுகிறார், பேசுகிறார். பின்னர் அவர் பெளத்தம் முழுமையாக தழுவுகிறார்.
ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட ஏதுமில்லை. மதம் என்பது கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. உலகெங்கும் நாங்கள் எவ்ளோ பேர் இருக்கோம் தெரியுமா என தற்பெருமை பேசும் நிறுவனங்கள் தானே மதங்கள்.... இதில் எதுவும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொறு மதமும் ஒரு கொடுரத்தை செய்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் நாமெல்லாம் ஆதி பெளத்தர்கள். வாருங்கள் பெளத்தம் ஏற்போம் என சமீப காலமாய் சில குரல்கள் கேட்கின்றன. அது முழுக்க முழுக்க ஓட்டு பிரிப்பு வேலைக்கான குரல் என்றாலும்... அது நல்ல குரல் அல்ல. ஏனெனில் இன்று இருக்கும் பெளத்தம் என்பது புத்தரின் தம்மத்தைவிட்டு விலகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அது புத்தர் இருக்கும் போதே பாதி நெகிழ்ந்துகொடுத்தது. மீதம் இருந்ததை புத்தருக்கு பின்னர் பார்ப்பனீயம் தின்று செரித்தது. பார்ப்பனீயம் தின்று செரித்த மிச்சம் தான் இன்று இருக்கும் மகாயாணம். புத்தரே பாதி நெகிழ்த்து அறிமுகம் செய்தது ஹீனயானம்.
பெளத்ததில் பெண்களின் நிலை இன்று மற்ற மதங்கள் பார்க்கும் பார்வையை விட கீழானது. அது பார்க்கும் பாவபுண்ணிய கணக்குகளும் அப்படியே. பூதகணங்கள், தேவர்கள், தேவகுமாரர்கள் என நீளும் கதையெல்லாம் இன்னும் பிரம்மாண்டமானது. இன்னும் ஒரு உண்மையை உரக்க சொன்னால் அவர்கள் உருவாக்கிய பல கதைகளை தான் இந்து மதம் இன்று சொல்லிக் கொண்டிருக்கிறது. குண்டலகேசியின் இணைப்பு கதைகளில் , பல பெரிய புராண கதைகளில் காணலாம். நிற்க.
இப்படித்தான் பெளத்தம் இருக்கிறது. புத்தரை வழிபடும் கூட்டம் பார்ப்பனியத்திற்கு சளைதத்து அல்ல. வாருங்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறுவோம், பெளத்தம் ஏற்போம் என்பது கொதிநிலைக்கு பயந்து அடுப்புக்குள் குதித்த கதைதான்.
மதங்களையே மறுப்பது ஒன்று தான் உங்களுக்குள் இருக்கும் மனிதம் முழுமையாக வெளிப்பட ஒரு வாய்ப்பு.
உங்களை நெறிப்படுத்த மதம் சாராத, புராண புரட்டுகள் இல்லாத பல அறநூல்கள் ஒவ்வொரு மொழியிலும் கொட்டிக்கிடக்கிறது. அந்த அறத்தை எடுத்து தான் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக மத நூல்களை உருவாக்குகிறார்கள். அதன் கற்பனையில் பொய் நம்பிக்கைகளை தூவி மத நூல்களாய் உங்களுக்கு கடைவிரிக்கிறார்கள்.
மானுடம் பேண மதசட்டையை கழட்டி எறியுங்கள்.அது மட்டுமே தீர்வு.
கருத்துகள்
கருத்துரையிடுக